Ilanji ThiruKumaran
அகத்தியர் கைப்பட்டதும் விஷ்ணு சிவலிங்கம் ஆனார்
குன்றிலிருக்கும், இடமெல்லாம் குமரன் அருள் இருக்கும். அவர்களுக்கு தனி சன்னதி இருக்கும். ஆனால், இலஞ்சிக் குமரன் நவக்கிரகங்களுக்கு அதிபதியாகி இங்கு அருள் புரிகிறான். எனவே, குமரனின் பார்வைப்பட்டால் தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. திருமணங்கள் நடைபெறும் கோயில் என்பது இலஞ்சியின் சிறப்பு.
இந்தக் கோயிலில் திருமணம் செய்து கொண்ட தம்பதிகள், 16 வகை செல்வங்களுடன் வாழ்வாங்கு வாழ்வர் என்பது தென்காசி மாவட்ட மக்களின் நம்பிக்கை. அதனால், இதை திருமண விஷேசங்களுக்கு உரிய கோயிலாக கருதி வழிபடுகின்றனர். இலஞ்சிக் குமரன் என்றாலும், இவரது உண்மையான பெயர் வரதராஜக்குமாரர். இங்கு ஈசனுக்கு தனி சன்னதி உண்டென்றாலும், பிரதான பூஜை மகனுக்கே. இலஞ்சிக்குமரன் வந்த வரலாறு என்ன? என்று விசாரித்தால், திரிகூட மலையின் வடகீழ் திசையில் தபஸ்விகள் சந்தித்த வரலாறுடன் துவங்குகிறது.
தவத்தில் சிறந்த முனிவர்களான துர்வாசர், காசிபர் மற்றும் கபில முனி திரிகூட மலையின் வடகீழ் திசையில் தங்கியிருந்து, தத்துவ ஆய்வுகள் செய்தனர். அப்போது அவர்களுக்குள் இந்த உலகம் உன் பொருளா? அல்லது இல்பொருளா, என்று விவாதம் ஏற்பட்டது. அதற்கான விடைதேடி 3 முனிவர்களும் குமரக்கடவுளை வணங்கினர்.
முனிவர்களின் குறைத்தீர்க்க எழுந்தருளிய குமரக்கடவுள், “நானே மும்மூர்த்தியாகி மூவினையும் புரிகிறோம்” என்று ஐயம் தெரிவித்தார்.
தங்கள் குறைபோக்கிய குமரக் கடவுள், அதே இடத்தில் எழுந்தருளி, நாடி வரும் பக்தர்களின் நன்மைக்கு அருள் செய்ய வேண்டும் என்று 3 முனிவர்களும், வேண்டினர். முனிவர்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப, அங்கேயே இலஞ்சிக் குமரனாக எழுந்தருளினார்.
இந்நேரத்தில், சிவன், பார்வதி திருமணத்தால் வடதிசை தாழ்ந்து, தென்திசை உயர்ந்தது. தென்திசையை சமன் செய்யும் நோக்கில் குறு முனி அகத்தியரை, பொதிகை நோக்கி பயணிக்க ஈசன் பணித்தார். “அய்யனே, நான் தென்திசை சென்றால், தங்கள் திருமணக் கோலத்தை எப்படி காண்பது” என்று அகத்தியர் கேட்க, “சந்தேகம் வேண்டாம். குற்றாலத்தில் நானே விஷ்ணுவாக அருள்பாலித்துக் கொண்டிருக்கிறேன். என்னை சிவலிங்கமாக்கி, ஆகமப்படி பூஜைகள் செய்து, திருமண கோலத்தை தரிசிக்கலாம்” என்று அருள் செய்தார்.
குற்றாலம் வந்த அகத்தியர், சைவ சின்னங்கள் தரித்து கோயிலுக்குள் செல்ல, அங்கு அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் மனம் சஞ்சலப்பட்ட அவர், இலஞ்சிக் குமரனை வேண்டினார்.
அங்கே, ஈசனை மண்ணால் உருவாக்கி வண்ங்கினார். “குமரக்கடவுளே, அப்பனின் சொல்கேட்டு இங்கு வந்தேன். கோயிலுக்குள் சென்று தரிசிக்க முடியவில்லையே” என்று மனதாற் மருக, அங்கே குமரக்கடவுள் பிரசன்னமானார். “அகத்தியரே, நாளை நீங்கள் வைணவ சின்னம் தரித்து கோயிலுக்குச் செல்லுங்கள். அங்கே உங்களுக்கு அனுமதி வழங்குவார்கள். நீங்கள் மூலஸ்தானம் சென்று, விஷ்ணு சிலையின் மீது கை வைத்து, தியானியுங்கள்…” என்று கூறி மறைந்தார். அகத்தியரும் மறுநாள் காலை சித்ரா நதியில் குளித்து, வைணவ சின்னங்கள் தரித்து கோயிலுக்குள் சென்றார். முருகன் அருளால் அவரை கோயில் கருவறை அழைத்துச் சென்றனர்.
கருவறைக்குள் சென்ற அகத்தியர், மனதால் ஈசனை நினைத்து, சிவலிங்கமாக்கி அருள் செய்க என்றபடி விஷ்ணு சிலையின் மீது கை வைத்து தியானித்தார். நொடிப்பொழுதில் விஷ்ணு சிலை சிவலிங்கமானது. இன்றைக்கும் சிவலிங்கத்தின் மீது அகத்தியரின் கை பதிந்ததற்கான அடையாளம் நிறையவே இருக்கிறது. இதன் பின்னர் இலஞ்சிக் குமரனை வழிபட்டு சென்ற அகத்தியர், நீண்ட காலம் குற்றாலத்தில் தான் உருவாக்கிய ஈசனுக்கு பூஜைகள் செய்து மகிழ்ந்தார்.
இலஞ்சிக் குமரன் கோயிலில் அகத்தியரால் உருவாக்கப்பட்ட ஈசன், இருவாலுக ஈசன் என்ற திருநாமத்துடன் அருள் செய்து கொண்டிருக்கிறார். இந்தக் கோயிலுக்கு ஒருமுறை வந்து சென்றால் நவக்கிரஹ பாதிப்புகள், வாழ்வில் நடக்கும் தீய சம்பவங்கள் எல்லாம் தாமே மறைகின்றனவாம். இங்கு நடைபெறும் கந்த சஷ்டி விழா மிகவும் பிரபலமானது.
திருக்குற்றாலத் தலபுராணத்தில் வெற்றி வேற்குமரன் விரும்பி அமர்ந்த தலம் என்றும், பிரம்மா, இந்திரன் குமரனை அர்ச்சித்து வாழ்ந்த இடம் என்றும் இக்கோயிலை குறிப்பிடுகிறது.